100ஐ தாண்டியது டெங்கு உயிரிழப்பு

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார்.

இன்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேசங்கள் இதில் முதல் இடங்களை பிடிக்கின்றன. மேலும், டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் இன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறலாம்.

பொதுவாக இலங்கையில் டெங்குவின் தாக்கம் ஆரம்பகாலங்களில் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு திடிரென ஏற்பட்ட டெங்கு அதிகரிப்பின் பின், இந்த நோய் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது. அதன் பின்னான காலப்பகுதியில் 2022ஆம் ஆண்டு தான் டெங்குவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

ஆனாலும், இவ்வாண்டு ஏற்பட்டு காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் டெங்குவின் தாக்கம் மிகவும் மோசமாக அதிகரித்து செல்கின்றது.

ஆகவே, டெங்குவின் அறிகுறிகள் இருப்பின் தவறாது சிகிச்சை நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்தது. காரணம் டெங்கு நோய் வெறுமனே மருந்து எடுத்து கொண்டு வீட்டில் ஓய்வெடுக்கும் நோய் அல்ல. 24 மணிநேரமும் கண்காணிக்கப்படவேண்டிய நோயாகும்.

தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் 17604 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் 15720 பேர் அடையாளம் காணப்பட்டடுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 8634பேரும் களுத்துறை மாவட்டத்தில் 5006பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மாத்திரம் 49பேர் வரை டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு – கிழக்கை பொருத்தவரை தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்

Recommended For You

About the Author: admin