எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
பொதுத்தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன.
இதன்படி, ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஏனையவர்கள் பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதானது பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுத் தேர்தலை கோரிவருகின்றனர்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை ஆதரிக்கும் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானத்தில் செல்வாக்கு செலுத்துவதில் கணிசமான அதிகாரத்தை கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் காட்சியைப் பொறுத்தவரை ஒரேயொரு ஆசனம் மட்டுமே காணப்படும் நிலையில், எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே அரசியல் கூட்டங்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது