சுகாதாரப் பாதுகாப்பு, டெங்கு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கியூபாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஹென்ரேஸ் மர்சலோ கொன்சிலாஸ் (Andrés Marcelo González) இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்ததுள்ளார்.
டெங்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு கியூபாவின் உதவிக்கு பாராட்டு கூறிய பிரதமர், மருத்துவ ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே விவசாயத்தில் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர் தினேஸ் குணவர்தன, தேங்காய் விதைகள் விரைவில் கியூபாவிற்கு வழங்கப்படும் என்று கியூப தூதுவரிடம் கூறினார்.
இலங்கையில் உணவு உற்பத்தி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கியூபா தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் கியூப தூதரகத்தின் முதல் செயலாளர் மரிபெல் டுர்ட் (Maribel Duarte) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.