பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கமிலா மார்ஷல் கூறுகையில், ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பிரித்தானிய அரசாங்கம் சமீபத்தில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இணைய பயனர்களின், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, வயது சரிபார்ப்பு உள்ளிட்ட பாதுகாப்புத் தரங்களை நிறுவனங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்கள் குழந்தைகளை முகப்புத்தகத்தை பயன்படுத்த அனுமதிக்கும் பெற்றோரை தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.