பாராளுமன்றத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது

போராட்டம் நடைபெற்ற காலத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு பாராளுமன்றம் முறையான அனுமதியை வழங்கியுள்ளதால்,அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி, மாற்றுக்கொள்கைக்கான நிலையம்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அம்பிகா சண்முகநாதன்,லிபரல் இளைஞர் அமைப்பு என்பன தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போாது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இதனை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கிற்கு காரணமாக அவசரகாலச் சட்டம் விதிமுறைகள், பாராளுமன்றத்தில் முறையான வகையில் விவாதங்களை நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரச சட்டத்தரணி இதன் போது கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளுக்கு அமைய அவ்வாறு நிறைவேற்றிய சட்டம் ஒன்றை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது.அது தொடர்பான விசாரணைகளை நடத்தும் அதிகாரமும் நீதிமன்றத்திற்கு இல்லை.

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான சமல் ராஜபக்ச வழக்கு தீர்ப்பின் மூலம் இது தெளிவாக உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏதேனும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளில் செல்லுப்படி தன்மை குறித்து பாராளுமன்றத்தால் மாத்திரமே ஆய்வு செய்ய முடியும். பாராளுமன்றத்தில் இது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனை நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

மேலும் இந்த வழக்கானது பொதுமக்களின் நலன்சார்ந்த வழக்கு அல்ல என அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் மனுக்கள் மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Recommended For You

About the Author: admin