கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய தம்பதியினர், தவறாக தாக்கப்பட்டிருக்கலாம் என மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 20 அன்று, 57 வயதான ஜக்தார் சிங் கொல்லப்பட்டார், மேலும் ஆயுதம் ஏந்திய நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது மனைவி மற்றும் மகள் படுகாயமடைந்தனர்.
ஜக்தார் சிங்கின் மனைவி, ஹர்பஜன் கவுர் (55), இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிகிச்சையின் போது உயிரிழந்தார், தம்பதியரின் மகள் தொடர்ந்து கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று தம்பதியின் மகன் வீட்டில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களால் 30 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அத்துடன், குற்றத்தின் பின்னணியைக் கண்டறியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்தக் கொலையின் அனைத்து அம்சங்களையும் விசாரித்து வருகின்றோம், “அந்த அம்சங்களைக்கொண்டு மிக விரைவில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் கனடாவில் கல்வி கற்கும் தங்கள் இரு பிள்ளைகளுடன் சென்று வசித்து வந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, கொலை நடந்த நாளில் அப்பகுதியில் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சமீபத்திய ஆண்டுகளில் நடந்த பல கும்பல் சண்டைகளில், குற்றவாளிகள் சம்பவத்தின் போது பயன்படுத்திய வாகனங்களை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அடிக்கடி தீ வைத்து எரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.