அண்மையில் அஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள்.
அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள்.
அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு ஆதீனத் தலைவரும் பங்கு பற்றினார்கள். காவியுடை அணிந்த ஒரு ஆதீன முதல்வரைக் குழுவுக்குள் உள்ளடக்கியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை மேலும் நெருங்கலாம், அதன் மூலம் இந்தியாவின் ஆளுங்கட்சியாகிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகளில் தாக்கங்களைச் செலுத்தலாம் என்றும் அவர்கள் சிந்தித்திருக்கலாம்.
சந்திப்புகள் தொடர்பாகக் கிடைத்த தகவல்களின்படி மேற்படி குழு புதுடில்லியில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.அந்த நூலின் பெயர் Bleeding Eelam “குருதி சிந்தும் ஈழம்” என்பதாகும். அதன் பின் அங்கு வெவ்வேறு சந்திப்புகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவற்றுடன் டெல்லி பிரஸ் கிளப்பில் ஒரு சந்திப்பும் நடந்திருக்கிறது. சந்திப்பில் விக்னேஸ்வரன் தான் ஏற்கனவே தயாரித்துக்கொண்டு சென்ற அறிக்கையை வாசித்திருக்கிறார். சிவாஜி லிங்கமும் சிவகுரு ஆதீன முதல்வரும் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார்கள்.
மேற்படி குழுவை, இந்திய ஆளுங்கட்சியின் நிறைவேற்று அதிகாரமுடைய அல்லது தீர்மானிக்கும் அதிகாரமுடைய முக்கியஸ்தர்கள் யாரும் சந்தித்திருக்கவில்லை என்று தெரிகிறது. சந்திப்பின்போது தாயகத்திலிருந்து சென்ற குழுவினர் இரண்டு விடயங்களை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. முதலாவது பொதுவாக்கெடுப்பு, இரண்டாவது 13ஐ முழுமையாக அமல்படுத்துவது.
அதே சமயம் டெல்லியில் அவர்கள் சந்தித்த முக்கியஸ்தர்கள் அவர்களிடம் பின்வரும் விடயங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்த்தியிருக்கிறார்கள். முதலாவது,தமிழ்மக்கள் ஒரே குரலில் விடையங்களை முன்வைக்க வேண்டும் என்பது.
இரண்டாவது பொதுஜன வாக்கெடுப்பை இந்தியா இப்போதைக்கு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாது என்பது. அவ்வாறு ஏற்றுக் கொண்டால் காஷ்மீரிலும் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை இந்தியா எதிர் வேண்டியிருக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
மேற்படி குழுவானது ஒரு கூட்டுக் கோரிக்கையோடு டெல்லிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.விக்னேஸ்வரன்,13ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்பவர்.அது தொடர்பாக ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.சிவாஜி லிங்கமும் சிவகுரு ஆதீனமும் பொதுஜன வாக்கெடுப்பை வலியுறுத்தும் தரப்புகள்.
தமிழரசுக் கட்சியை சேர்ந்த இருவரும் சமஸ்டிக் கோரிக்கையை முன் வைப்பவர்கள்.அதாவது டெல்லிக்குச் சென்ற தாயகக் குழுவில் மூன்று வேறு நிலைப்பாடுகள் உண்டு. எனினும் பொது ஜன வாக்கெடுப்பை குறித்து ஒரே குரலில் அவர்கள் பேசியதாக குழுவில் இடம் பெற்ற சிலர் கூறியிருக்கிறார்கள்.
இந்தியா பொதுஜன வாக்கெடுப்பை ஆதரிக்காது என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை.இந்தியா மட்டுமல்ல மேற்கு நாடுகளும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பொதுஜன வாக்கெடுப்பைக் குறித்து பெரிய அளவில் கதைத்திருக்கவில்லை. பொதுஜன வாக்கெடுப்பு எனப்படுவது,முழுக்க முழுக்க ஒரு அரசியல் தீர்மானம்.அப்படி ஒரு தீர்மானத்தை மேற்கு நாடுகளும் இந்தியாவும் எடுத்தால்தான்,அது சாத்தியம்.
அத் தீர்மானமானது ஈழத் தமிழர்களின் விருப்பங்களில் இருந்து மற்றும் தோன்றுவதில்லை. மாறாக பலம் பொருந்திய நாடுகளின் புவிசார் மற்றும் பூகோள அரசியல் லாப நட்டங்களின் அடிப்படையில் தான் அது தீர்மானிக்கப்படும்.உலகில் இதுவரையிலும் நடந்த எல்லாப் பொதுஜன வாக்கெடுப்புகளும் அவ்வாறானவைதான்.எனவே தமிழர்களின் விடையத்தில் பொதுஜன வாக்கெடுப்பு என்ற கோரிக்கை ஒரு யதார்த்தமாக மாறுவது என்று சொன்னால் இந்தியாவிலும் மேற்கு நாடுகளின் மத்தியிலும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
குறிப்பாக மேற்கு நாடுகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இனப் பிரச்சினைகளில் தலையீடு செய்தபோது,அங்கெல்லாம் பொதுஜன வாக்கெடுப்பை ஒரு தீர்வாக முன்வைத்திருக்கின்றன.
ஆனால் ஈழத் தமிழர்களின் விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படும் இந்தியா அதற்குச் சம்மதிக்குமா?எனவே இந்தியாவை நோக்கி அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதே அடிப்படை உண்மையாகும்.இந்த அடிப்படையில் பார்த்தால் புலம்பெயர்ந்த தமிழ் ஏற்பாட்டாளர்களின் மேற்படி முயற்சி வரவேற்கத்தக்கது.
இதுபோன்று வேறு பல் நகர்வுகளையும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானவை வருமாறு முதலாவது, லண்டனை மையமாகக் கொண்ட பிரித்தானியத் தமிழர் பேரவை என்று அமைப்பு, இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியோடு நெருங்கிச் செயல்பட விளைகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அமைப்பாளரான அண்ணாமலை லண்டனுக்குச் சென்றபோது, அந்த வருகையை “உறவுப் பாலம்” என்று பிரித்தானிய தமிழர் பேரவை வர்ணித்தது. அண்ணாமலை பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதானிகளைச் சந்திப்பதற்கு ஒழுங்குகளும் செய்யப்பட்டன.
இரண்டாவதாக,மற்றொரு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பாகிய உலகத் தமிழர் அமைப்பு (GTF) கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னதாக அமெரிக்க பிரதானிகளை சந்தித்தது.இச்சந்திப்புக்களில் இலங்கை தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்களில் செல்வாக்கு மிக்க பிரதானிகள் சிலரை அவர்கள் சந்தித்தார்கள்.
மூன்றாவதாக, பிரான்சை மையமாகக் கொண்ட “உலகத் தமிழர் இயக்கம்” என்ற ஒரு அமைப்பு கடந்த 14 ஆண்டுகளாக ஐநாவில் வேலை செய்து வருகிறது. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் அந்த அமைப்பு ஐரோப்பாவுக்கு அழைப்பதுண்டு.
குறிப்பாக ஜெனிவா விவகாரங்களில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிபோல அந்த அமைப்பு செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
நாலாவதாக,லண்டனை மையமாகக் கொண்ட மூன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் “சிறு துளி” என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, புதுடில்லியும் உட்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.இக்கருத்தரங்குகளில் ஆர்.எஸ் எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். மேலும் தாயக்கத்திலிருந்து முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் கட்சியும் கலந்து கொண்டது.
ஐந்தாவதாக,கடந்த ஆண்டு டெல்லியில் ஒரு மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு ஐரோப்பாவில் வசிக்கும் ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயற்சித்தார்கள். அதற்கு தாயகத்தில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.எனினும் கடைசி நேரத்தில் அந்த மகாநாட்டுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
ஆறாவதாக, கனடாவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பில் கனடாவின் அரசியல் தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக உழைத்து வருகிறார்கள்.
அவர்களுடைய உழைப்பின் விளைவாகத்தான் கனடா இனப்படுகொலை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சில நகர்வுகளை முன்னெடுத்தது. இரண்டு மூத்த ராஜபக்சங்களுக்கும் எதிரான தடை; இனப்படுகொலைத் தீர்மானம் என்பன அவற்றுள் முக்கியமானவை.
மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. வெவ்வேறு நோக்கு நிலைகளைக் கொண்ட, வெவ்வேறு அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இந்தியாவை அமெரிக்காவை; ஐரோப்பாவை; ஐநா.வைக் கையாளவேண்டும் என்ற முடிவு எடுத்து,சில நகர்வுகளை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் இந்த நகர்வுகள் ஒரு மையத்தில் இருந்து தீர்மானிக்கப்படவில்லை.
குறிப்பாக,இந்திய ஆளுங்கட்சியாக பாரதிய ஜனதாவை நோக்கி வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் நெருங்கிச் செல்ல முயற்சிக்கின்றார்கள். இந்த முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் பாரம்பரியத்தில் வந்த அமைப்புகள் மட்டுமல்ல,புளட் இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்த அமைப்புகளும் ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஈடுபடுகின்றார்கள்.
இவர்களுக்கிடையே ஒன்றிணைப்பு இல்லை.இது வழமையான ஈழத் தமிழ் வருத்தம்தான்.தனித்தனியாக இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு,பணம் இருக்கிறது;மொழி இருக்கிறது;தொடர்பு இருக்கிறது; என்பதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியாக ஓடினால் என்ன நடக்கும்? ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை இருக்காது. அதன்படி ஒரு பொதுவான வெளியுறவு அணுகுமுறையும் இருக்காது.
எல்லாருமே ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யத்தான் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதை ஒன்றாகச் செய்தால்,ஒரு பொதுவான வெளியுறவு கொள்கையின் அடிப்படையில்,யார் யாரை சந்திப்பது என்று முடிவெடுத்து அந்த அடிப்படையில் இயங்கினால்,நிலைமை வேறு.ஆனால் அவ்வாறான செயற்பாடுகளைக் காண முடியவில்லை.
மேலும்,இவ்வாறு தனித்தனியாக அணுகினால்,அது கொள்கை வகுப்பாளர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு சித்திரத்தைக் கொடுக்கும்? ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாக இல்லை, தங்களுக்குள் பல்வேறு அமைப்புகளாய் பல்வேறு கூறுகளாய்ச் சிதறிப்போய் இருக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தைத் தானே கொடுக்கும்?
அது மட்டுமல்ல தமிழ்ச்சக்தி ஒரே விடயத்துக்காக வெவ்வேறு தரப்புகளால் செலவழிக்கப்படுவது என்பது, ஒரு சிறிய மக்கள் கூட்டமாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை விரயமானது. மட்டுமல்ல, ஈழத் தமிழர்களைத் தனித்தனியாகக் கையாளலாம், பிரித்துக் கையாளலாம் என்ற வாய்ப்பையும் அது அவர்களுக்கு உணர்த்தும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் எதையோ செய்ய முயற்சிக்கிறார்கள். நமது மக்களுக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நன்மையை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் நிதிப் பலம் உண்டு;மொழி வளம் உண்டு;தொடர்புகள் உண்டு; எல்லாவற்றையும் விட தாயகத்தை நோக்கிய பிரிவேக்கம் உண்டு; தோல்வியை ஒப்புக்கொள்ளாத கூட்டு மனம் உண்டு.
இவற்றுடன்,அவர்கள் வாழும் நாடுகளில் அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான வெளியுறவுச் செயற்பாடுகளில் வெளிப்படையாக செயல்படத் தேவையான களங்கள் உண்டு; சுதந்திரம் உண்டு.
இவற்றுடன் மற்றொரு காரணமும் உண்டு. அது என்னவெனில், தாயகத்தில் உள்ள தரப்புகள் குறிப்பாக, மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புகள் வெளியுறவுச் செயற்பாடுகளில் போதிய அளவுக்கு அல்லது பொருத்தமான விதங்களில் செயல்படவில்லை என்று அவர்கள் கருதுவதும் ஒரு காரணம். அவர்கள் அவ்வாறு கருதுவதில் உண்மையும் உண்டு. இக்காரணங்களால் அவர்கள் வெளியுறவுச் செயற்பாடுகளில் முனைப்பாக ஈடுபடுகிறார்கள்.
ஆனால் அது ஒரு தலைகீழ் செய்முறை.ஏனெனில் வெளியுறவுச் செயற்பாடுகளை தாயகத்தில் இருந்து மக்கள் ஆணையை பெற்ற ஒரு தரப்புத் தான் முன்னெடுக்க வேண்டும். வெளியுறவுச் செயற்பாடுகள் எனப்படுகின்றவை, இரண்டு அதிகார மையங்களுக்கு இடையிலான செயல்பாடுகள்தான்.அதை மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு தரப்பு முன்னெடுக்கும் பொழுது அதற்கு வலிமை மிக அதிகம்.
எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் தனியாக வெளியுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமாக இல்லை. தாயகத்தோடு இணைந்துதான் அதைச் செய்யலாம். அதற்குத் தாயகத்தில் உள்ள தரப்புகளோடு புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்புகள் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான இணைந்து செயல்படும் தளங்களை; கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு செய்யும் அரசியல் நடவடிக்கைகள் சில சமயம் தாயகத்தில் தடை செய்யப்பட்டவைகளாக இருக்கும்.அவ்வாறான ஒரு பின்னணியில்,இரண்டு தரப்பும் இணைந்து செயல்பட முடியாது.எனவே இரண்டு தரப்பும் இணைந்து செயல்படத் தேவையான பலமான, இடையூடாட்டக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதற்கு வேண்டிய ஒரு பொது நிதியை உருவாக்க வேண்டும்.அதன் பின் பொதுவான கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படலாம்.