ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு அரசுமுறை பயணமொன்றை மேற்கொள்ளக்கூடுமென அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வலுவான பொருளாதார உறவுகளை பேணுவது சமகால அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
அதன் பிரகாரம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுடன் புதிய பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதியின் மலேசிய விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மலேசியாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பும் அந்நாட்டு பிரதமரால் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.