நாட்டில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புவியியல் பணியகத்தின் அனுமதியின்றி, சுங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு, சுங்கத் திணைக்களத்திடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளதாக புவியியல் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, விசேட கணக்காய்வு அறிக்கையில், 2018 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தால் 5 கொள்கலன்களில் தங்கம் கலந்த மண் சுங்க அதிகாரிகளின் முறையான பரிசோதனையின்றி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் இதில் சுங்கத்துறை அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என தணிக்கைத் துறை பரிந்துரைத்ததுடன், இதில் தொடர்புடைய புவியியல் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.