எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருளள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டொலர் தட்டுப்பாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே போட்டித்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் இதனால் சிறந்த பலன் கிடைக்கும். காரணம் எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும், ஐ.ஓ.சி.யும் மாத்திரம் எரிபொருட்களை இறக்குமதி செய்த போது, ஒரு கட்டத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டொலர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதனால் முழு நாட்டிலும் எரிபொருள் அற்ற நிலைமை கூட ஏற்பட்டது.
இவ்வாறான நிலைமை இனி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே 3 நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையுடன் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் எரிபொருட்களின் விலைகளை இவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது. உலக சந்தை நிலவரம் மற்றும் டொலரின் பெறுமதி என்பவற்றின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால் சென்று எரிபொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.