புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து “மனுசவி” எனும் புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளன.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இடையில் தொடர்புடைய கடன் முன்மொழிவு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், ஒரு தொழிலைத் தொடங்குதல் அல்லது விரிவுபடுத்துதல், வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது விரிவுபடுத்துதல், நிலம் அல்லது வாகனம் வாங்குதல், குழந்தைகளின் உயர்கல்வி அல்லது பிற உற்பத்தி நோக்கங்களுக்காக கடன் பெறலாம்.
இந்த கடன் திட்டத்தை செயல்படுத்த 5 பில்லியன் ரூபாய் வரை ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பெறக்கூடிய கடனின் அதிகபட்ச வரம்பு 2 மில்லியன் ரூபாய் ஆகும்.
மேலும், கடன் வாங்குபவரிடம் இருந்து வசூலிக்கக்கூடிய அதிகபட்ச வட்டி விகிதம் 8 விகிதம் ஆகும். மேலும், பணத்தை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக 36 மாதங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுசவி கடனை எவ்வாறு பெறலாம்?
ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி, உரிமம் பெற்ற வணிக வங்கியில் தனி அல்லது கூட்டு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கை பராமரிக்க வேண்டும்.
அந்தந்தக் கணக்கிற்கு (குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்குள்) அந்நியச் செலாவணியை அனுப்பியிருக்க வேண்டும்.
இதன்மூலம்தான் குறித்த நபர், கடன் திட்டத்திற்கு தகுதி பெற முடியும்.
கடனைப் பெற, வெளிநாடு செல்வதற்கு முன் அல்லது வெளிநாட்டில் இருக்கும்போது விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக்கு அனுப்பலாம்,
அதேசமயம் விண்ணப்பதாரர் தனது நெருங்கிய உறவினருக்குத் தங்கள் சார்பாக கடன் தொகையைப் பெற அதிகாரம் வழங்கும் வழக்கறிஞர் மூலம் அங்கிகரிக்க முடியும்.
கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பிறகு இலங்கை ரூபாய் பெறுமதியில் கடனைத் தீர்க்க முடியும். இதற்கு நடைமுறையில் உள்ள சந்தை வட்டி விகிதங்கள் பொருந்தும்.
இந்த முயற்சிக்கு பங்களிக்கும் பின்வரும் உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு 4 விகிதம் வருடாந்திர வட்டி விகிதத்தில் CBSL இன் பிராந்திய மேம்பாட்டுத் துறை மூலம் மறு நிதியளிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன:
எந்த வங்கிகளில் கடன்களை பெற முடியும்?
இலங்கை வங்கி
மக்கள் வங்கி
வணிக வங்கி
ஹட்டன் நேஷனல் வங்கி
சம்பத் வங்கி
செலான் வங்கி
கார்கில்ஸ் வங்கி
DFCC வங்கி
தேசிய வளர்ச்சி வங்கி
பான் ஏசியா வங்கி
யூனியன் வங்கி