சிங்களத்தால் நாட்டை முன்னேற முடியாது! பகிரங்கமாக அறிவித்த சஜித்

சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வியின் புதிய யுகம்
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது.

நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, குறுகிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது” என்றார்.

 

மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது.

எனவே உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin