வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு விசாரணை

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 2023.12.08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

அடையாள அணிவகுப்பு
குறித்த வழக்கு இன்று (2023.12.04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

கடந்த வழக்கு தவணையில், இன்றைய தினம் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டது. இந்நிலையில் , வழக்கின் பிரதான சாட்சியமான, உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மன்றில் சமூகமளிக்காத நிலையில், அடையாள அணிவகுப்புக்கு 08ஆம் திகதியை திகதியிட்டது.

அதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் , அடையாள அணிவகுப்பு சந்தேகநபர்களை முற்படுத்தும்போது, சந்தேகநபர்களுடன் முற்படுத்தப்படும் ஏனைய நபர்கள் சந்தேகநபர்களின் தோற்றத்தை ஒத்தவர்களாவும் , பொலிஸ் உத்தியோகஸ்தர்களாகவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அதனை மன்று ஏற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து 08ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்புக்கு திகதியிட்ட மன்று , நாளை (2023.12.05) மதியம் 2.30 மணிக்கு மரண விசாரணைக்காக திகதியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor