பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோரின் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முதன்முறையாக முகத்தை அடையாளப்படுத்தும் தொழில்நுட்பத்தை நாட்டின் நீதி அமைப்பில் பயன்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவவில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற ட்ரயல் அட்-பார் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காண இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
புதிய தொழில்நுட்பம்
கடந்த வெள்ளிக்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, பிரதி மன்றாடியார் நாயகம் ஜானக பிரசன்ன பண்டார, சட்டமா அதிபர் திணைக்களத்தால் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் என்பதை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன் மூலம், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், அந்தக் காட்சிகளில் காணப்பட்டவர்களின் முகங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துப் போகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும் முடியும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அடையாளம் காணுவதற்கு மற்றும் குற்றத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றும் பிரதி மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 41 பேர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இறந்துவிட்டனர் என்பதோடு மேலும் இருவர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் விசாரிக்கப்படுகின்றார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என்பதோடு மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (01.12.2023) குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும், தாம் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.