உலகிலேயே ஆபத்தான தேவாலயம் என அறியப்படுவது எத்தியோப்பியா நாட்டில் கடல்பரப்பில் இருந்து 2500 அடி உயத்தில் இருக்கும் அபுனா யெமாதா குஹ். அணுகுவதற்கு மிகவும் கடினமான இந்த கோவில் செங்குத்தான மலை மீது அமைந்திருக்கிறது.
இந்த கோவிலில் இருந்து எந்த பக்கம் பார்த்தாலும் 650 அடி செங்குத்தாகவே கீழே இறங்குகிறது. எத்தியோப்பியாவின் தெக்ரோ என்ற பகுதியில் உள்ள மலை உச்சியில் இந்த தேவாலயம் இருக்கிறது. இங்கு வரவேண்டுமென்றால் கைப்பிடி இல்லாத விளிம்புகள் வழியாக மேலே ஏற வேண்டும்.
பாதி தகர்ந்து இருக்கும் பாலத்தைக் கடக்க வேண்டும். சற்று வழுக்கினாலும் பரலோகம் தான் என்ற நிலை இருக்கிறது. எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் இந்த கோவிலுக்கு மக்கள் வருவது நிற்கவில்லை. குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க குடும்பம் குடும்பமாக மக்கள் இங்கு வருகைத்தருகின்றனர்.
வண்மையான சித்திரங்கள்
இறந்தவர்களின் சடலங்களை இங்கு தூக்கிக்கொண்டு வந்து புதைக்கின்றனர். கி.பி 5ம் நூற்றாண்டில் யாமதா என்ற எகிப்திய பாதிரியார் இந்த இடத்துக்கு வந்து மலையைக் குடைந்து இந்த தேவாலயத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரது பக்தி அதீத சாகசம் நிறைந்ததாக இருந்திருக்கிறது.
இந்த கோவிலின் வழி நூற்றாண்டுகள் பல கடந்தும் அவர் நினைவுகூறப்படுகிறார். இதுவரை இந்த கோவிலில் இருந்து யாரும் கீழே விழுந்தது இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மலைமீது வந்து ஏன் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு.
அருட்திரு.யாமதா தனியாக மேகங்களுக்கு இடையில் அமர்ந்து வழிபடுவதற்காக இந்த கோவிலைக் கட்டியிருக்கிறார் என சிலரும், பாதிரியார்களை சோதனை செய்பவர்களிடம் இருந்து விலகியிருப்பதற்காக கோவிலை கட்டினார் என சிலரும் கூறுகின்றனர்.
கடுமையான மற்றும் அச்சத்திற்குரிய பயணத்தைக் கடந்து இந்த கோவிலை அடைந்தால் உள்ளே வண்ணமயமான சித்திரங்களைப் பார்க்கலாம். பழமையான இந்த சித்திரங்கள் தேவதூதர்கள் மற்றும் தேவதைகளை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
இந்த மலையில் தங்கி வழிபாடு செய்த சில பாதிரியார்கள் 30,40 ஆண்டுகள் கீழேயே இறங்காமல் இங்கு வாழ்ந்துள்ளனர். இந்த தேவாலயத்தில் இருந்து கீழே பார்த்தால் பைபிளில் குறிப்பிடப்படும் நிலத்தைக் காணலாம்.
விளை நிலங்களின் மீது மேகத்தின் நிழல் நகருவதையும், மேய்ச்சல்காரர்கள் மந்தைகளை ஓட்டிச் செல்வதையும் காணலாம். நல்ல காற்றோட்டத்துடன் பத்தியுள்ளவர்களுக்கு எத்தியோப்பியாவின் சொர்க்கம் போல காட்சியளிக்கும் இந்த தேவாலயத்துக்கு சாவின் விளிம்பில் நடந்து வரவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்!