கனடாவில் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பக்றீயா தாக்கத்தினால் மற்றும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 30 வயது வரையிலானவர்களே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோவில் இந்த நோய்த் தொற்று பரவுகை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவரும் கனடாவிற்கு வெளியே பிறந்தவர்கள் என றொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் பிறந்த நாடுகளில் குழந்தைப் பருவத்தில் மெனிங்கோகோகல் தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உமிழ் நீர் மூலமாக இந்த நோய் பிரதானமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருமல், முத்தமிடுதல் போன்றவற்றினால் ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு நோய்த் தொற்று பரவுகின்றது.
இந்த நோய்த் தொற்று உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் எனவும் மரணம் ஏற்படவும் சாத்தியம் உண்டு எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த நோய்த் தொற்று ஏனைய பகுதிகளில் பரவியமைக்கான சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.