கோட்டாவிற்கு பிரதமர் பதவியை வழங்க திட்டம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க விருப்பமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொடஆகியோரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே இவ்வாறு பதிலளித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் ஆதரவு
“எங்களுக்கு விருப்பம்தான். கண்டிப்பாக வாக்களிப்போம்.கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாட்டுக்கு வரவேண்டும். அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர் 69 இலட்சம் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி. அப்படியானால் அவர் பிரதமர் ஆவது யாருக்கு தான் பிடிக்காது? நான் அதற்கு எதிரானவன் இல்லை, அவர் கேட்டால் அவருக்கு வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தேசிய பட்டியலிலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு நியமனம்

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் எனவும்,திரும்பிய உடன் அந்த கட்சியில் உயர் பதவியொன்றினை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor