கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அபாயகரமான 300 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலையீட்டில் மரங்களை அகற்றும் வேலைத்திட்டத்திற்கான பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மரங்களால் ஆபத்து
ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மரங்களை ஆய்வு செய்வதற்காக பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து நிபுணத்துவ பரிசோதகர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மரத்திற்கு மரம் சென்று மரங்களை பார்வையிடுவார் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மேலும், நகராட்சியில் கணிசமான அளவு மரம் வெட்டும் கருவிகள் இருப்பதாகவும், தேவைப்பட்டால், தனியார் துறையை தொடர்பு கொண்டு, அதற்கான உதவிகளை பெறுவதாகவும் அவர் கூறினார்.