மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான தரப்புக்களை ஏற்கனவே இனங்கண்டுள்ள மக்கள், எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கு தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்குத் தேவையான மணல் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மணல் திட்டுக்களில் இருந்து மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தினை மேற்கொள்வது தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.