நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இது வரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின் முதல் வெற்றி இதுவாகும்.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றிருந்தது.
நாணய சுழற்சியின் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நெதர்லாந்து அணி ஒரு கட்டத்தில் 91 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 150 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதே பெரும் சந்தேகமாக இருந்தது.
எனினும், ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோரின் நிதான துடுப்பாட்டம் நெதர்லாந்து அணியின் மொத்த ஒட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.
இந்த இருவரும் சேர்ந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இது நெதர்லாந்து அணி சார்பில் இதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் ஆகும்.
சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ஓட்டங்களையும், லோகன் வான் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நெதர்லாந்தின் வாய்ப்பை முறியடித்த சதீர
பின்னர் 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றிருந்தது.
இலங்கை தரப்பில் சதீர சமரவிக்ரம 107 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
பதும் நிஸ்ஸங்க 54 ஓட்டங்களையும் சரித் அசலங்கா 44 ஓட்டங்களையும் பெற்றனர். நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காயம் அடைந்த தசுன் ஷனகா இல்லாத நிலையில், குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கடைசி போட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியிலும் ஆரம்பத்தில் நெதர்லாந்து அணி சிறப்பாக பந்து வீசியிருந்தது. 104 ஓட்டங்களுக்கு இலங்கை அணியின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
எனினும், சதீர சமரவிக்ரம பொறுமையாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.