ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. டன்சில் அகமது 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் எடுத்தனர். நடு வரிசையில் தவ்ஹீத் 16 ரன்களிலும் முசுபிகுர் ரஹீம் 38 ரன்களிலும் முகமதுல்லா 46 ரன்கள் எடுக்க வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.
இந்திய வீரர்கள் பும்ரா,சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் அடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினர். குறிப்பாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
இதேபோன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர்களுடன் 55 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இருவரும் ஆட்டம் இழந்தவுடன், விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடினார்.விராட் கோலியை ஆட்டம் இழக்க வைக்க வங்கதேச வீரர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அவருக்கு துணையாக நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் வெளியேற கே எல் ராகுல் 34 ரன்கள் எடுத்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு சதம் அடித்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பதற்காக சிங்கிள் ஓடி கடைசியாக வெற்றிக்கு இரண்டு ரன்கள் இருந்தபோது சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய 48வது சட்டத்தையும் விராட் கோலி பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 48 சதங்கள் அடித்த வீரர், அதிவேகமாக சர்வதேச அளவில் 26 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.