மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை தொடர்பில் பண்ணையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கரிசனைகொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒரேமேசையில் அழைத்து கலந்துரையாடி தீர்வளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உணர்வாளர்கள் குழுவின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பண்ணைளர்களுக்கும் இடையில் சந்திப்பு இன்று (08) செங்கலடி மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பண்ணையாளர்கள் சார்பில், பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீ.தியாகராசா செயலாளர் பா.பரசுராமன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசியர் த. ஜெயசிங்கம் அடங்கிய குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
இச்சமயத்தில் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சம்பந்தமான மகஜரொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பேராசிரியர்.த.ஜெயசிங்கம், பண்ணையாளர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துரைத்ததோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பிலும் அதீத கவனம் எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மயிலத்தமடு பண்யைளார்கள் சம்பந்தமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை எட்டும்பொருட்டு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், மகாவலி அதிகாரசபை, வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரேமேசையில் அழைத்து கலந்துரையாடி நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் குழுவின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.