கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைகள் 2025ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட படி அந்தந்த காலப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால், கல்வி அமைச்சருக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கமைய இவ்வருடத்தில் பரீட்சைகளை நடத்துமாறும், 2024க்குரிய பரீட்சைகளை அந்த வருடத்துக்குள்ளேயே நடத்தி முடிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
2025இலிருந்து திட்டமிட்ட படி மாணவர்களுக்கு சுமை ஏற்படாத வகையில் பரீட்சைகளை நடத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் சட்ட ஏற்பாடுகள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய பரீட்சையை நடத்துவதற்கான குறிப்பிட்ட தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களுக்கு அவற்றுக்கு தயாராவதற்கு இலகுவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அரசியல் காரணங்களுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ பரீட்சை திகதிகளில் சட்ட ரீதியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்த கல்வி நிபுணர்கள், நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில் பெறுதல், அதற்கான வயது வரம்பு அதிகரித்தல் போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சருக்கு இவ்வாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.