கொள்ளுப்பிட்டி விபத்தின் வாகன சாரதி மற்றும் நடத்துனருக்கு விடுமுறை!

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ் இருவரையும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து அதன் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரம் வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் கொழும்பு நகரில் உள்ள மரங்களின் உறுதித்தன்மை தொடர்பில் விசேட குழுவொன்று அடுத்த வாரம் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய இந்த செயற்பாடு இடம்பெறவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் அவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor