நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் ஆபத்து! EPDP எச்சரிக்கை

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்யத் தயங்காது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக இனவாதத்தை கக்கிக்கொண்டே இருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.120.2023)  ஊடகச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில் :

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலை உற்றுநோக்குகின்ற சனல் 4, திலீபனின் ஊர்தி பவனி, குறுந்தூர் மலை தீர்ப்பு தொடர்பான நீதிபதியின் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சமூகவலைத் தளங்களை கட்டப்படுத்தல் என காலத்துக்கு காலம் ஒவ்வொரு செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மைப் பொறுத்தவரை இவ்வாறான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக தீர்வாக அரசியல் தீர்வையெ நாம் வலியுறுத்துகின்றோம்.

 

அதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டியவர்கள் என்பதை காண்பித்து நிற்கின்றது.
அதேபோல ஐ.நா சபை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் எல்லாம் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஓர் அணியாக ஒரே நிலைப்பாட்டில் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றன.

 

ஆனால் துரதிஷ்டம் வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகளில் அவ்வாறான ஓர் இணக்கப்பாடான சூழல் இல்லை என்பதே கண்கூடாக உள்ளது.
இவ்வாறான சூழல் இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
குறிப்பாக பயங்கரவாத திருத்தச் சட்டத்தை நோக்குவோமாக இருந்தால் இது நிறைவேறும் பட்சத்தில் அதனால் தமிழ் பேசும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்றது.

 

இதனால் கொதிப்படைந்த நிலையில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஆனால் கடந்தகாலங்களில் இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை வேவு பார்த்ததாகவும் அவருக்கெதிரான சதித் திட்டங்களை வகுத்ததாகவும் தெரிவித்து புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை சில தமிழ் அரரசியல் கட்சிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் சாதகமாக பயன்படுத்துவதுடன் தமக்கு சாதகமற்ற காலங்களில் அதற்கு எதிராக பொது வெளியில் கூச்சலிடுவதும் ஏன் என்று புரியவில்லை.

நல்லாட்சி அரசு காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு வழிவகை செய்து கொடுத்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் மௌனமாகவே இருந்தனர்.

ஆகவே காலத்துக்கு காலம் மாறி மாறி ஏதோ ஒரு பிரச்சினை வரத்தான் போகின்றது என்பதே ஜதார்த்தமாகும்.
அதேபோல சமூகவலைத் தளங்களை கட்டப்படுத்தல் இனவாதக் கருத்துக்களை பரவவிட்டு இன முறுகல் நிலைகளை உருவாக்கி நாட்டில் ஏற்பட்டுவரும் இன நல்லிணக்கத்தையும் பொருளாதார இடரிலிருந்து நாடு மீள்வதையும் சீரழிப்பதற்கு வழிவகை செய்வதாகவே அமைகின்றது.

 

எனவே,பெருந்தேசியவாதமும் குறுந்தேசியவாதமும் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது அரசியல் நகர்வுகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஆகவே, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ்த் தரப்பினருக்கிடையே இருக்கின்ற ஒன்றுமையீனத்தை களைந்து அனைத்துத் தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டுடன் அரசியல் தீர்வுக்கான வழியைத் தேடுவதே சிறந்தது என்பது எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது. இதை இந்தியாவும் எதிர்பார்க்கின்றது. அதேபோல மேற்குலகமும் இதையே தமிழ்த் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான சிறந்த வழியாக அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுடன் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைவதனூடாகவே அதை எட்டமுடியும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN