கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினர்களுக்கு அறிவித்துள்ளார்.
வெள்ளம், பலத்த காற்று, மண் மேடுகள் இடிந்து விழுதல், கடும் மழை, பாறைகள் சரிதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை 2350 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 399 ஆகவும், ஏனைய சொத்து சேதங்கள் 37 ஆகவும் பதிவாகியுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாத்தறை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலான அவசர சந்திப்பொன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (04.10.2023) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.