மக்களின் வரிச் சுமையை மேலும் அதிகரிக்க முடியாது!

நாட்டின் தற்போதைய நிலையில் இதைவிட அதிகமாக வரிச் சுமையை மக்கள் மீது சுமத்த முடியாதென சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான இலக்குகள் அவசியம் என்றும், இதற்காக தற்போதுள்ள வரிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு நாணய நிதியத்திடம் அரசாங்கம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்றாத காரணத்தால், இரண்டாம் தவணை நிதியை வழங்க நாணய நிதியம் மறுத்துள்ளதாக சில தரப்பினர் குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இயலுமான அளவில் தற்போது நாட்டில் வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வரி விதிப்பை அதிகரிக்க முடியாது என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உரிய இலக்கை அடைய வேண்டுமாயின் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை கேட்டுள்ளனர். வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மீண்டும் வரிகளை அதிகரிக்க முடியாது. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor