இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை முற்றாக தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபைகளின் ஐந்தாவது மாநாடு கொழும்பில் உள்ள ஷங்கிரிலா விருந்தகத்தில் நேற்றைய தினம் (02.10.2023) இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றை பாவனை பிளாஸ்டிக்
அக்டோபர் முதலாம் திகதி முதல் பல்வேறு வகையான ஒற்றை பாவனை பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு தடை விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள நிலையில் நசீர் அகமட் மாநாட்டில் வைத்து மேலும் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் அரசாங்கம் ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் பல்வேறு பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில், இந்த பூலோகத்தை அச்சுறுத்தும் பொருட்களின் சுழற்சியை முழுமையாக கட்டுப்படுத்தி, குறைத்து விடுவோம் என்று நம்புகிறோம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மாநாடு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை விவாதிக்கவும் முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கங்கள், அரசுகளுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.