இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்துகளை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் யூ.என்.டி.பி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இலங்கையில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் உள்ளன. அந்த முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யூ.என்.டி.பி நிறுவனத்தின் E-Mobility திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 300 முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கும், அதற்கான முறைமை ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு யூ.என்.டி.பி நிறுவனம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
மின்சார பேருந்து சேவை
இதற்கு மேலதிகமாக கொழும்பு நகரில் மின்சார பேருந்து சேவையை ஆரம்பிக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணிகள் போக்குவரத்து தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பொறுப்பையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக, கட்டண நிர்ணயம் மற்றும் அபராதம் விதிக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும். மேலும் மின்சாரமாக மாற்றப்படும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படும்.”என கூறியுள்ளார்.