திருகோணமலை, இலுப்பைக்குளத்தில் விகாரைக் கட்டுமானப் பணிகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரவு வேளைகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண ஆளுநரால் தடை
கடந்த 25ஆம் திகதி இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அது குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்தப் பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் தடை விதித்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், அப்பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தப் பகுதியில் விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 3ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பின்னர் 9 ஆம் திகதி காலை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்தப் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்