கணவன் வாங்கிய கடனை கொடுக்காததால் மனைவியை சித்திரவதை செய்த நபர்கள்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பீகார் மாநிலம் – பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பிரமோத் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவரின், மனைவி கடந்த 23ஆம் திகதி இரவு குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் பொது குழாயடிக்கு சென்றுள்ளார்.

அப்போது பிரமோத்தும் அவரின் கூட்டாளிகளும் தொழிலாளியின் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கடன் மற்றும் வட்டி பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர்.

அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த பிரமோத்தும் அவரின் கூட்டாளிகளும் அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

பிரமோத்தின் மகன் அன்சூகுமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். பின்னர் உயிரைக் காப்பாற்ற அந்த பெண் ஆடையில்லாமலேயே வீட்டுக்கு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமையை கணவர், உறவினர்களிடம் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஜிதேந்திர சிங் கங்குவார் தெரிவிக்கையில்,

‘இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து பிரமோத் குமார், அவரின் மகன் அன்சூ குமார் உட்பட 6 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ரூ1,500 கடனை கொடுத்து விட்டதாகவும் அதன்பிறகும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor