விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறைக்கப்படும்! அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300 இற்கும் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக 24.07.2023 அன்று அனுப்பி வைத்த கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
யாழ்ப்பாணத்தின் விவசாய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கான மின்னிணைப்புகள் கடந்தகாலங்களில் வழங்கப்பட்டன.
அவற்றின் மின்மானிகளுக்கான மாத வாடகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது மின் மானிக்கட்டணத்தாலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, யாழ்ப்பாணம் பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கான மின்மானி வாடகையை மானிய அடிப்படையில் அறவிடுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடிதமும் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
இதன்படி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாய மின்னிணைப்பு பெற்று தற்போது குறித்த விலைக்கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விபரங்களையும் கோரிக்கையையும் வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்விபரங்களை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுசென்று மின்மானிக்கட்டணத்துக்கான மானிய விலைக்குறைப்பை செய்யவும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN