கந்தரோடையில் சேதன வீட்டுத்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு
தற்போது உலகில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணுமுகமாக வீட்டுத் தோட்டங்களை பிரபலப்படுத்தும் செயற்பாடு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும்,எதிர்காலச் சந்ததியினர் நஞ்சற்ற இயற்கையான உணவை உண்ண வேண்டும் எனும் நோக்கிலும் பல்வேறு இயற்கை விவசாய செயற்பாட்டு உத்திகளை விவசாயப் போதனாசிரியர்கள் பாடசாலைகள் தோறும் மாணவர் மத்தியில் வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் சுன்னாகம் விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினி வீட்டுத் தோட்டம் செய்வதற்கான இடத்தெரிவு, வீட்டுத் தோட்டத்தில் பயிர்த்தெரிவு, பண்படுத்தல் மற்றும் சிக்கன நீர்ப்பாசன உத்தி, இயற்கை நாசினிப் பயன்பாடு, மண்புழு திரவ உர உற்பத்தி என்பவை பற்றி செயல் முறையுடன் கூடிய செயல் விளக்கங்களை கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் சிறப்பான முறையில் மேற்கொண்டார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் இச் செயல் விளக்கங்களை அவதானித்தும், செயற்பாட்டில் ஈடுபட்டும் பயன்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை விவசாயக் கழகத்தை விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளைஞர் விவசாயக் கழகமாகவும் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை தமது பகுதி விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினியிடம் கையளித்தனர்.
பாடசாலை முதல்வர் சைலினி பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இச் செயற்பாடுகளில் வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை நிகழ்ச்சித்திட்ட வளவாளர் எஸ்.சிவகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.