பிரித்தானிய இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வாரண்ட் அதிகாரி பால் கார்னி மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரித்தானிய இராணுவமானது ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும், எந்த வகையான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள பிரித்தானிய இராணுவத்திற்கு துணிவு உண்டு.
மேலும், குடும்பத்தினரையும் நெருங்கிய உறவினர்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளித்து புறப்பட தயாராக வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உலகம் மொத்தமாக மாறிவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த உலகம் அல்ல இது. பிரித்தானிய துருப்புகளும் புதிய யதார்த்தங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இராணுவத்தினருக்கான மாத இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள வாரண்ட் அதிகாரி பால் கார்னி குறித்த தகவலை பதிவு செய்துள்ளார். பிரித்தானிய ராணுவம் உடலளவில் போருக்கு தயாராக வேண்டும் எனவும், அதற்கு குடும்பத்தினரையும் மனதளவில் தயார்ப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினரின் ஆதரவு இன்றி நம்மால் எந்த முயற்சியையும் முன்னெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், நமது குடும்பம் தொடர்பில் நாம் கவலை கொண்டிருந்தால் நாம் நமது பணியில் 100% ஈடுபாடு கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.