அமெரிக்காவில் மாயமான இலங்கை கடற்படையினர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்ற பின்னர் கப்பலில் இருந்து குதித்து தலைமறைவான இலங்கையின் ஒன்பது கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராகவும் அந்த நாட்டில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

காணாமல்போன அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக வோசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க கடலோர காவல்படையினரின் தலையீட்டை உத்தியோகபூர்வமாக நாடியுள்ளது.

அவர்கள், கடற்படை ஒழுக்காற்று நடைமுறைகளின் படியும் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கடற்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க குடியேற்றச் சட்டங்களை மீறுவோர் கைது, தடுப்புக்காவல் மற்றும் நாடு கடத்தலுக்கு உள்ளாகலாம், மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருப்பவர்கள் 10 ஆண்டுகள் வரை அமெரிக்கா திரும்புவதைத் தடுக்கலாம் என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கடலோரக் காவல்படை
கடந்த ஒக்டோபரில், நூறுக்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் குழுவொன்று, அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றபோதே இ;ந்த 9 பேரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இதேபோன்ற கூட்டுப் பயிற்சியின் போது, இலங்கை கடற்படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் காணாமல் போனதாகவும், எனினும் அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கப்பல்
இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட, கட்டர் டக்ளஸ் மன்ரோ என்ற கரையோரக் கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த கப்பல் இலங்கைக்கு வரும்போது பயிற்சிகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் அதன் மூலமாக நாடு திரும்பவுள்ளனர்.

பயிற்சிக்காக சென்ற ஒரு கட்டளை அதிகாரியின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படை உறுப்பினர்களை கொண்ட இலங்கைக் கடற்படைக் குழு, தற்போது ஹவாயில் நிலைகொண்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அமெரிக்க கடலோரக் காவல்படை கட்டர் கப்பல் மறுசீரமைக்கப்படும் வரை, அவர்களது அமெரிக்க சகாக்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ உதவி ஒப்பந்தத்தின் கீழ். அமெரிக்காவினால் இலங்கை கடற்படைக்கு பரிசாக வழங்கப்படும் மூன்றாவது கப்பல் இதுவாகும்.

Recommended For You

About the Author: webeditor