கல்முனை மாநகரத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருளுடன் சந்தேகநபரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய வெள்ளிக்கிழமை(19) இரவு இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனைகுடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சந்தேகநபர் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று குறித்த போதை பொருட்களை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரை கல்முனை அம்மன் கோவில் வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வியாபாரி என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்
மேலும் இதன்போது ஹெரோயின் 4 கிராம் 42 மில்லி கிராம் உட்பட கேரளா கஞ்சா 765 கிராமும் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.