ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை யாருக்கு? மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!
ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (15.09.3023) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:
தென்னிலங்கை – பெரும்பான்மையினத் தலைவர்கள் சர்வதேச விசாரணையைக் கோருவது என்பது தேர்தலுக்கான யுக்தியே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களையோ அல்லது காரணமானவர்களைக் கண்டறிவதற்கோ அல்ல.
மாறாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது உத்தியோகபூர்வ இணையத்தில் தாங்கள் தான் அதை மேற்கொண்டதாக உரிமை கோரிய பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று சர்வதேச விசாரணையைக் கோருவதென்பது சர்வதேச தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதா அல்லது அன்றைய காலத்தில் ஆட்சியிலிருந்த மைத்திரிபால சிறிசேன மீதா என்பதை மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலின் பின்னர் சர்வதேச தீவிரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பது அமெரிக்காவினதும் ஏனைய சர்வதேச நாடுகளினதும் முடிவாக அமைந்திருந்தது.
ஆயினும் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாமல் பன்னாட்டு படைகள் இன்று தொடர்ந்தும் போராடி வருகின்றன.
இந்தச் சூழலில் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு உரிமை கோரிய பின்னர் சர்வதேச விசாரணை என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை நோக்கியதாகவே பார்க்கவேண்டி உள்ளது.
ஆனால், 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் வாக்கு வங்கிகளை கருத்தில் கொண்ட அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை.
அதுமட்டுமல்லாது 1983 ஜுலை கலவரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர். ஆட்சியில் நடைபெற்றபோது அன்று ஜே.ஆர். குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.
அதன்பின்னர் பிரேமதாச ஆட்சியில் நடந்த அநீதிகளுக்கு பிரேமதாச குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.
அதன்பின்னர் வடக்கில் நடந்த சூரியக்கதிர் நடவடிக்கை அழிவுகளுக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.
அதன்பின்னர் மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான அழிவகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளியாக வர்ணிக்கப்பட்டார்.
அதன்படி பார்த்தால் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு அன்றைய ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக வர்ணிக்கப்பட வேண்டியதுதான் ஜதார்த்தம்.
அவ்வாறல்லாமல் சர்வதேச விசாரணை என்று வலியுறுத்த முனைவது 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
சர்வதேச விசாரணைகளை சரி பிழைகளுக்கு அப்பால் தமிழர் தரப்பால் கோரப்பட்டபோது அன்று மௌனம் சாதித்த தென்னிலங்கை தலைவர்களும் ஐ.நாவில் இலங்கைக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க உழைத்த தமிழ்த் தலைவர்களும் தேர்தல் கனவை வைத்து இன்று கருத்துக்கள் கூற முனைவது மக்கள் நலன் சார்ந்ததற்கு மாறாக தமது பதவி நலன்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.