சனல் 4இல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனச் ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

அந்த மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக இவற்றை வரையிலும் என்ன விசாரணை நடந்தது? என்ன முன்னேற்றம் நடந்தது? என்று எவருக்கும் தெரியாமல் உள்ளது. அந்தத் தாக்குதல் சம்பந்தமாகப் பல சந்தேகத்துக்குரிய விடயங்கள் வெளிவந்திருக்கின்றன.

‘சனல் 4’ தொலைக்காட்சி
2019 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவே அந்தத் தாக்குதல் ஒரு தரப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது.

இதைத்தான் ‘சனல் 4’ தொலைக்காட்சி பல ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் பல தரப்பினராலும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.

உள்நாட்டில் நடைபெற்ற விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதபடியால் சர்வதேச விசாரணை வேண்டுமெனப் பல தரப்பினரும் வலியுறுத்துகின்றமை நியாயமான கோரிக்கையாகும்.

இந்தக் கருமத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கிய சர்வதேச சமூகம் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor