யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கையடக்கத்தொலைபேசியை வழங்கியுள்ளார்.
சிசிடிவியால் சிக்கிய நபர்
குறித்த கைதி களுத்துறை சிறைச்சாலையில் நன்னடத்தை இல்லாத காரணத்தினால் நன்னடத்தைக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர். ஒரு கிராம் மற்றும் 04 மில்லிகிராம் ஹெரோயின் வழக்கில் 14வருட தண்டனை கைதியாவர்.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் வழிகாட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை (15 ) சிறைச்சாலையில் நடைபெற்ற சோதனையில் தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதன் பின்பு நடைபெற்ற விசாரணையின் போது டி.கே. எதிரிசிங்க என்ற உத்தியோகத்தரே தொலைபேசி கொடுத்தார் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கைதான உத்தியோகஸ்தர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.