கட்டுநாயக்க பகுதியில் 18 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (15-08-2023) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண்ணும், நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞரும் ஆவார்.
குறித்த இளைஞர் கட்டுநாயக்கா, கோவின்ன பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன் இருவரும் அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து உணவு பெற்று இந்த பெண் 5,000 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸாருக்கு உணவக உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளின் பின்னர் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவரிடமிருந்து 17 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கலர் ஸ்கேனர் மற்றும் பல கணினி சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.