கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் (2007 – 2022) மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 2,221 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பயணிகளை எதிர்பார்க்கும் போது, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையானது கடந்த வருடம் மத்தள விமான நிலையத்தின் ஊடாக மொத்தம் 11,577 பயணிகளே பயணித்துள்ளதாகவும், 2017 முதல் 2022க்கு இடையில் மத்தள சர்வதேச விமானம் ஊடாக 103,324 பயணிகளே பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தை முதன் முதலில் மேம்படுத்தும் திட்டத்திற்கு 3,656 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அதற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன் தொகை 1,900 கோடி ரூபாவாகும்.
மத்தள சர்வதேச விமான நிலையம் உண்மையில் அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமே தவிர, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி சிவில் விமான சேவைகளுக்காக மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதுடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்காக 89 மில்லியன் செலவிடப்பட்ட போதிலும் எந்தவித வருமானம் ஈட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.