அடுத்த தசாப்தத்திற்குள், தென்னை சார் உற்பத்திகளிலிருந்து 02 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
தெங்கு உற்பத்தி வருமானம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. எமது நாட்டின் தெங்கு உற்பத்தியில் காணப்படும் பல்வகைத்தன்மை காரணமாக அதற்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் பால், தேங்காய் சிரட்டை, கார்பன் உற்பத்திகள் ஆகியவற்றிற்கான கேள்வி அதிகரித்து வருகின்றது.
எதிர்பார்க்கப்படும் இலாபம்
இவ்வருடத்தில் தென்னை சார் உற்பத்திகள் ஊடாக 700 மில்லியன் டொலர் இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தசாப்தத்திற்குள், தென்னை சார் உற்பத்திகளிலிருந்து 02 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெங்கு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையை மாற்றி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.