நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரியால் நிதி வழங்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைப்பு பணிகளை இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.
காலம் காலமாக நட்டத்தில் இயங்கிய அரச நிறுவனங்கள் தற்போது இலாபமடைவதால் அவற்றை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது.
நட்டமடையும் அரச நிறுவனங்களக்கு திறைசேரியால் நிதி வழங்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைப்பு பணிகளை இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும். ஆகவே நிலையான தீர்வினை இலக்காக கொண்டு செயற்படுவது அத்தியாவசியமானதாக அமையும்.
அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பை தனியார் மயப்படுத்தல் என்று குறிப்பிடுவது முறையற்றது. அரச நிறுவனங்களின் தனியுரிமையை அரசாங்கம் வைத்துக் கொண்டு மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படும்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஆராய நிதியமைச்சில் விசேட தனி அலகு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்படும். மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்படும்.
நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருந்து கொள்வனவு விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு ஜனாதிபதி சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மருந்து விவகாரத்தை கொண்டு அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.