எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்னநாயக்க உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த விடயம் குறித்து அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தேவைப்படும் நிதி தொடர்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிதி
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய, வரவு செலவு திட்டத்தில் அதனை உள்ளடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீட்டு தொடர்பில் நிதி அமைச்சுடனும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் செலவு விவரங்களை நிதி அமைச்சுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் தொகையை மதிப்பீடு செய்து அதனை கூடிய விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.