காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்ற விடயத்தை தயவு செய்து இனரீதியாக பார்த்து அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூரண விளக்கம் இல்லாமல் தேவையற்ற விதத்தில் ஆளுநரை அவமதிப்பது, குற்றம் சாட்டுவது பொருத்தமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்ற விடயம் தொடர்பில் ஆளுநருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டமை மற்றும் இப்பிரச்சனை தொடர்பில் பா.உ ஜனா அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தை ஆள்வதற்கு செந்தில் தொண்டமான் யார் என்று அமைச்சர் நசீர் அகமட் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தற்போது ஒரு பெரிய சர்ச்சையாக கிழக்கு மாகாணத்திலே உருவெடுத்திருக்கின்றது. அமைச்சர் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக வந்த மாகாணசபை முறையில் மாகாணசபையில் அரசியல் ரீதியான பிரதிநிதிகள் இல்லாதவிடத்து முழு மாகாணத்தின் அதிகாரமும் ஆளுநரின் கைகளில் தான் இருக்கின்றது. மாகாணத்தை ஆள்வதற்கு செந்தில் தொண்டமான் யார் என்ற கேள்வி ஒரு பிரயோசனம் அற்றதாகவே இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஆளுநர் அவர்கள் தான் மாகாணத்தை ஆட்சி செய்யும் கடமையில், பொறுப்பில் இருக்கின்றார்.
காத்தான்குடி கோட்டைக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் என்பது உண்மையிலேயே ஒரு பழிவாங்கலாக ஆளுநர் அவர்கள் செய்யவில்லை என்றே கருதுகின்றேன். கோட்டைக் கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்தவர் தான் இருக்க வேண்டும் என்று சுற்றுநிருபம் இருக்கின்ற காரணத்தினாலும், வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபாரிசின் அடிப்படையிலும சம்மந்தப்பட்டவர் ஆளுநரை அனுகியிருந்தார். அந்த விடயத்திலே ஆளுநரிடம் அவரை சிபாரிசு செய்யுமாறு என்னிடமும் கேட்கப்பட்டது. அவரது தகமையின் அடிப்படையில் அவரை நானும் சிபாரிசு செய்திருந்தேன். ஏற்கனவே கோட்டைக் கல்வி அதிகாரியாக இருந்தவர் அதிபர் தரத்திலானவர். அவரிடம் ஏற்கனவே கிழக்கு மாகாண செயலாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளருக்குக் கோரப்பட்டது அவருக்கு ஒரு பொருத்தமான பாடசாலையைக் கொடுக்குமறு. ஆனால் அவர் அந்த இலங்;கை கல்வி நிருவாக சேவை அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அடம்பிடித்ததன் காரணமாகத் தான் அந்த அதிபர் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன்.
அதாவது மேலதிகாரியான மாகாண கல்வி அமைச்சின் செயலாளரது உத்தரவுக்குக் கட்டுப்படாததன் காரணமாகத்தான அவர் இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அந்த ரீதியில் நசீர் அகமட் அவர்கள் பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவையற்ற விதத்தில் ஆளுநரை அவமதிப்பது, குற்றம் சாட்டுவது பொருத்தமானதல்ல.
இந்த அறிக்கையை நான் வெளியிட வேண்டிய அவசியம் என்னவென்றால் இந்த விடயத்தில் நானும் தொடர்பு பட்டவன். என்னுடைய பெயரும் அந்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே எடுக்கப்பட்டது என்ற காரணத்தினாலேயே இந்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
தயவு செய்து இதனை இனரீதியாக பார்த்து அமைச்சர் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த ஆளுநர் வந்ததன் பிற்பாடுதான் இந்த மாகாணத்திலே ஓரளவிற்கு இனப்பாகுபாடற்ற, மதப் பாகுபாடற்ற வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இருந்த ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்கள் ஒரு இனத்திற்காக மாத்திரம் வேலை செய்து ஏனைய பெரும்பான்மையாக வாழும் தமிழ் பேசும் இனங்களை ஒதுக்கியிருக்கும் போது நசிர் அகமட் அமைச்சராக இருந்து கொண்டு அவருக்கு எதிராகப் பேசாதவிடத்து தற்போது இந்தச் சிறிய பிரச்சினையைப் பூதாகரமாக எடுப்பது வேண்டத்தகாத விடயம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.