காய்கறிகளை தினமும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதுவும் ஒருசில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். பச்சையாக சாப்பிடக்கூடியவாறான காய்கறிகள் அனைத்துமே சுவையாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு காய்கறி தான் கேரட். கேரட்டுகள் கண்ணைக் கவரும் நிறத்தைக் கொண்டதோடு இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
இதனால் இது பலரின் விருப்பமான காய்கறியாக உள்ளது.
கேரட்
கேரட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கண்களில் எவ்வித பிரச்சனைகளும் வராமல் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
கேரட்டில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன.
இது தவிர இதில் வைட்டமின் சி, லுடீன், ஜியாக்சாண்டின், வைட்டமின் கே, டயட்டரி நார்ச்சத்து போன்றவையும் அதிகமாக உள்ளன.
அதுவும் கேரட்டை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
கண்களுக்கு நல்லது
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் அது கண் வறட்சியை ஏற்படுத்தி பார்க்கும் திறனை பாதிக்கும்.
இந்த குறைபாடு முற்றிய நிலையில் மாலைக்கண் நோய் ஏற்படும்.
ஆனால் கேரட்டில் இந்த வைட்டமின் ஏ, லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள் போதும்.
எடை இழப்புக்கு உதவும்
கேரட், ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிடாமல் கேரட்டை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் வேகமாக குறையும்.
ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.
சரும ஆரோக்கியம் மேம்படும்
அழகை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு மிகச்சிறந்த வழி தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது தான்.
கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கரோட்டீன், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கேரட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டுமானால், வைட்டமின் சி உடலில் வளமான அளவில் இருக்க வேண்டும்.
கேரட்டை உட்கொள்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ளும்.