சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க மைத்திரியின் ஆட்சியிலேயே அனுமதி! ஈ.பி.டி.பி. பதிலடி

மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூர நோக்கான மக்களின் நலத்திட்டங்களை சேறுபூசம் அல்லது அதை செய்யவிடக்கூடாது என்ற நோக்கில் தடுப்பதற்காகவே இவ்வாறான தமக்கு ஏற்ற ஒரு சிலரைக் கொண்டு அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (07.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில்;

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது துறைசார்ந்த அமைச்சினது ஆளுகைக்குள் உள்ள விடயத்தை உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளாது இங்குள்ள ஒருசில தனது கட்சி முகவர்களது கருத்துக்களை கேட்டு விடயத்தை ஆராயாமல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் பாரம்பரிய கடற்றொழில் முறைமை பாதிக்கப்படுவதாகவும் சிறு தொழிலாளர்களும் அவர்களது தொழிலை இழக்கும் நிலைமை உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அமைச்சர் டக்டளஸ் தேவானந்தா அவர்களின் திட்டமிடலின் பயனாக இன்று பல சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் கடலட்டை பண்ணை நடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

அதேவேளை கடலட்டைப் பண்ணைக்குரிய அனுமதிகள் அது தொடர்பான துறைசார் ஆட்சி நிறுவனங்களினால் ஆய்வக்கட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே அப்பகுதி சங்கங்களின் அங்கீகாரலங்களுடன் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்து கொள்ள விரும்பின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக அத்தகவல்களை சுயாதீனமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அவர் அதை விடுத்து இவ்வாறான தனது முகவர்களது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பிரதிபலிக்க செய்யும் வகையில் முனைவது அவரது மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலேயே யாழ். அரியாலைப் பகுதியில் கடலட்டை குஞ்சுகள் வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கங்களுக்காக கூறப்பட்டவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பது யாவரும் அறிந்ததே என்றும் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN