யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று(25), ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி பொறியியல் பீடத்தின் மின் மற்றும் இலத்திரனியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். கே. அகிலன் மின் மற்றும் இலத்திரனியல் துறையில் பேராசிரியராகவும் , விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி க. பகீரதன் விவசாய உயிரியல் துறையில் பேராசிரியராகவும், இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) விக்னேஸ்வரி பவநேசன், இந்து நாகரிகத் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.