யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென குறித்த ஆசிரியர் தாக்கிய நிலையில் இருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் மல்லாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தனது மகன் மீது குறித்த ஆசிரியர் பாடசாலையில் வைத்து திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தலைப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனின் மூளை நரம்புப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.