பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, ஆவணத்தில் உள்ள சில விதிகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதை அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2023, மார்ச் 22ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுஆய்வு செய்ய மூத்த சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அமைத்தது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த குழுவின் அவதானிப்பின்படி யோசனையின் 85 மற்றும் 86 குற்றவியல் அம்சங்கள், நீதி அமைப்பின் கொள்கைகளை மீறுகின்றன மற்றும் குடிமக்களின் சட்ட உரிமைகளுக்கு முரணானவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள், இலங்கையின் அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே சட்டத்திற்கு இணங்க, திருத்தங்களைச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சகம் மற்றும் அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் கோரியுள்ளது.